சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா மீதான வழக்குவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான மொஹம்மட் சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா மீதான வழக்கு, கல்முனை மேல் நீதிமன்றத்தில் நீதிபதி ரொக்ஸி முன்னிலையில் இன்று முன் விளக்க மாநாட்டுக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்குத் தொடுநர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுகர்ஸி ஹேரத்துடன் அரச தரப்பு சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரனும் மன்றில் முன்னிலையாகி இருந்தார். 

இன்றைய முன் விளக்க மாநாட்டின் போது, வழக்குத் தொடுநரால் முன்மொழியப்பட்ட ஏற்புகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

சாய்ந்தமருது – வௌிவேரியன் கிராமத்தில் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றதையும், இதில் சஹ்ரானின் மகன் இறந்ததையும் சஹ்ரானின் மகள் காயமடைந்ததையும் சஹ்ரானின் மனைவி காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி ஏற்றுக்கொண்டதாக சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன், சந்தேகநபரின் வாக்குமூலங்கள் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்வதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு வழங்கப்பட்ட வாக்குமூலங்கள் அச்சுறுத்தல், வாக்குறுதி அல்லது வேறு ஏதேனும் எதிர்பார்ப்புகளின் நிமித்தம் வழங்கப்பட்டதாகவும் அந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் சுயவிருப்பின் பேரில் வழங்கப்படவில்லை எனவும் இவை குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களின் சுயாதீன தன்மையினை 
கேள்விக்குட்படுத்துவதாகவும் பிரதிவாதி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை பிணையில் விடுவிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் வழக்குத் தொடுநரால் தமது ஆட்சேபனைகளை எழுத்து மூலமாக சமர்பிப்பதற்கு தவணை கோரப்பட்டுள்ளது.

Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *