தேசிய நல்லிணக்கம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சர்வகட்சி மாநாடொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாளை (26) மாலை 05 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.
13 ஆவது திருத்தம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.
இந்த கூட்டத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் பங்கேற்பதாக பொதுச்செயலாளர் குறிப்பிட்டார்.
இதனிடையே, சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ளாதிருக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் கூறினார்.
சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்வது தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டினை அறிவித்துள்ளன.
ஜனாதிபதி தலைமையிலான கூட்டத்தில் தாம் பங்கேற்கப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் நேற்று தெரிவித்தார்.
நாளைய கூட்டத்தில் மாகாண சபை தேர்தல், பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டினார்.
நேற்றிரவு நடைபெற்ற ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் சர்வகட்சி கலந்துரையாடலில் பங்கேற்பதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் C.V.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் நேற்று குறிப்பிட்டிருந்தார்.
எனினும், ஜனாதிபதி தலைமையிலான சர்வகட்சிக் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது.
Reported by :S.Kumara