எரிவாயு சிலிண்டர் ஒன்றினைப் பெறுவதற்காக வந்திருந்த பெண்மணி யொருவர் தனக்கு எரிவாயு சிலிண்டர் வழங்கப்படாதமையால் எரிவாயு சிலிண்டர் ஏற்றப்பட்ட லொறியின் குறுக்கே அமர்ந்து அதைச் செல்ல விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் நேற்று வாதுவ பொதுபிட்டியவில் இடம்பெற்றது.
ஒரு சிலிண்டரையாவது கொள்வனவு செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என தெரிவித்து அந்தப் பெண் லொறியின் முன்னால் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அந்தப் பகுதியில் சமையல் எரிவாயுவிற்காக வந்த பலர் காணப்பட்டனர்.
பகல் 1.30 மணியளவில் லொறியொன்று சமையல் எரிவாயு சிலிண்டர்களுடன் அந்தப் பகுதிக்கு வந்தது.
எனினும் முகவர்களிற்கு போதியளவு சமையல் எரிவாயு வழங்கப்படாமையால் அந்தப் பெண்ணால் சமையல் எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்மணி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நிரம்பிய லொறியின் முன்னால் அமர்ந்து கொண்டார், எனக்கு சமையல் எரிவாயுவை வழங்காவிட்டால் லொறியை என் மீது செலுத்தித்தான் கொண்டு செல்ல வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக அந்தப் பகுதியில் குழப்பமான நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து லொறியைக் கொண்டு செல்ல முடியாத நிலை காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்,
பின்னர் ஒரு சிலிண்டர் வழங்கப்படும் என்ற உறுதிமொழியை தொடர்ந்து அந்தப் பெண் அங்கிருந்து சென்றார்.
———–
Reported by : Sisil.L