தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றார்.இளைஞர்களைக் கைது செய்து தடுத்து வைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வந்தாறுமூலை டயமண்ட் விளையாட்டுக் கழகத்துக்கு மைதானத்தை கையளிக்கும் நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.தேவையற்ற விதத்தில் இளைஞர்களைக் கைதுசெய்து தடுத்து வைக்க வேண்டிய அவசியம் எமது அரசாங்கத்துக்கு இல்லை. தெரியாமல் செய்த குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தால் அதிகமான விடயங்களைச் செய்ய முடியவில்லை. அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் பல விடயங்களைப் பின்பற்ற வேண்டும்.
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். இதனடிப்படையில் இதுவரை 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பேஸ்புக்கில், புகைப்படங்களைப் பதிவிட்ட குற்றங்களுக்காக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து நீதித் துறையுடன் பேசி, அவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படும்.
குறித்த கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் போது கூறினார்.
—————
Reported by : Sisil.L