கொள்ளுப்பிட்டியில் பஸ் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்தவர்களில் மூவர் தொடர்ந்தும் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (06) காலை இடம்பெற்ற அனர்த்தத்தில் 5 பேர் உயிரிழந்திருந்தனர்.
கொழும்பு – கொள்ளுப்பிட்டி, டுப்ளிகேசன் வீதியில் நேற்று காலை 6.05 அளவில் மத்துகமவில் இருந்து வந்திருந்த பஸ் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்தது.
இந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரில் பேலியகொட – பராக்கிரம மாவத்தையை சேர்ந்த 61 வயதான பாலகிருஷ்ணன் சுப்ரமணியம் ஒருவராவார்.
பாலகிருஷ்ணன் சுப்ரமணியத்தின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 9 ஆம் திகதி மாதம்பிட்டி பொது மயானத்தில் நடைபெறவுள்ளது.
வெலிசறை – தொடுபல பகுதியை சேர்ந்த 30 வயதான அருண பெர்னாண்டோவும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
தனியார் பிரிவில் பணிபுரிந்து வரும் அருண பெர்னாண்டோ, வேலைக்கு சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்தில் சிக்கியுள்ளார்.
உயிரிழந்த ஐவரில் மாத்தளையை சேர்ந்த 31 வயதான சுரேஷ் ரத்நாயக்கவும் உள்ளடங்குகின்றார்.
அங்ஹகம பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான G.A.சதுங்ரங்க மற்றும் கொழும்பு 13-ஐ சேர்ந்த 54 வயதான U.S.பிரியஞ்சனா ஆகியோரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
Reported by :S.Kumara