பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர ரீதியான கவலைகள் அடிப்படையில் குர்ஆன் மற்றும் ஏனைய மத நூல்களை எரிப்பதுடன் தொடர்புபட்ட ஆர்ப்பட்டங்களுக்கு தடை விதிக்க டென்மார் பரிசீலித்து வருகிறது.
கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பது முக்கியமானதாக இருக்கும் அதேநேரம் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களால் கடும்போக்காளர்கள் பயன்பெறுவதோடு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஒன்றும் உள்ளது என்று டென்மார்க் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
டென்மார்க்கில் உள்ள தூதரகங்களுக்கு வெளியில் நடக்கும் போராட்டங்கள் உட்பட சில சூழ்நிலைகளில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களில் தலையிடுவதற்கு டென்மார்க் அரசு திட்டமிடுகிறது.
சுவீடனிலும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவிருப்பதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களின் புனித குர்ஆனை எரிக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கு இந்த இரு ஸ்கண்டிநேவிய நாடுகளும் அனுமதி அளித்தது அந்த நாடுகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதோடு பல முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளுடன் முறுகல் நிலைக்கு வழிவகுத்துள்ளது.
டென்மார்க் வெளியுறவு அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “டென்மார்க்கிற்கு குறிப்பிடத்தக்க பாதகமான விளைவை ஏற்படுத்தக்கூடிய மற்ற நாடுகள், கலாசாரங்கள் மற்றும் சமயங்களை அவமதிக்கு ஆர்ப்பாட்டங்களில் தலையிடுவது தொடர்பில் பரிசீலித்து வருகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் கருத்துச் சுதந்திரம் அடிப்படையானது என்று டென்மார்க் அரசு வலியுறுத்தியுள்ளது.
Reported by :N.Sameera