கிளிநொச்சியில் தீயில் எரிந்த நிலையில் தாயும், மகளும் சடலங்களாக மீட்பு

கிளிநொச்சி, புன்னைநீராவிப் பகுதியில் தீயில் எரிந்த நிலையில் தாயும், மகளும் சடலங்களாக மீட்க்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


கடந்த (ஜன-20) நள்ளிரவு 11.50 மணியளவில் தாயும் தனது 17 வயது மகளும் தீயில் எரிந்து உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.


இச் சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


 தந்தையும், மகனும் குடும்பக் கஷ்டம் காரணமாக கூலி வேலைக்கு வெளி மாவட்டத்துக்குச் சென்ற சமயமே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.


இச்சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் தீவிர விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர் . இச்சம்பவத்தில்  47 வயதுடைய ஆனந்தராசா சீதேவி எனும் 07 பிள்ளைகளின் தாயாரும், அவரது 17 வயதுடைய லக்சிகா எனும் மகளுமே உயிரிழந்துள்ளனர்.


இந்த நிலையில்  சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் இன்று(22) காலை பார்வையிட்டார்.
குறித்த சடலங்களை பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளும் அதே வேளை பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்ட நிலையில் சடலங்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளன.


அத்துடன் அப்பகுதியில் ஒரு போத்தலில் பெற்றோல் மற்றும் ஒரு கத்தி, ஒரு தொலைபேசி என்பனவற்றை தடயவியல் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
—————-
நீர்த்தேக்கங்களில் வறட்சி ; கொழும்புக்கான குடிநீரின் அளவை மட்டுப்படுத்த வேண்டிய நிலை


கொழும்புக்குத் தேவையான குடிநீரின் அளவை மட்டுப் படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவதே இதற்குக் காரணம்.


கொழும்புக்கு நீர் வழங்கும் களனி ஆற்றுக்கு நீர் வழங்கும் காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீர்த்தேக்கங்கள் வேகமாக வறண்டு போவதால் பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்துக்குள் குறைக்கப்பட வேண்டும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


மின் உற்பத்திக்கும் நீர் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால், வறண்டு போகும் விகிதத்துக்கு ஏற்ப மின் உற்பத்தியை மட்டுப்படுத்தி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டியது அவசியமாகும் எனவும் திடீர் மழை பெய்யாவிட்டால் நீர்மட்டம் மேலும் குறையும் என்றும் அப்பேச்சாளர் மேலும் கூறினார்.
——————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *