காங்கேசன்துறையிலிருந்து மீண்டும் நாகப்பட்டினத்திற்கு பயணமானது செரியாபாணி கப்பல்

சுமார் நான்கு தசாப்தங்களின் பின்னர் தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து தனது கன்னி பயணத்தை ஆரம்பித்த செரியாபாணி (Cheriyapani) பயணிகள் கப்பல்  காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைய, பயணிகள் கப்பல்  சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இன்று (14) காலை நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வுகளைத் தொடர்ந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கான கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டது. 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளி ஊடாக அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு கப்பல் சேவையை ஆரம்பித்து வைத்தார்.

இந்தியா – இலங்கை இடையே தூதரக, பொருளாதார உறவுகளில் புதிய அத்தியாயத்தை படைக்கும் வகையில் இந்தக் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

காங்கேசன்துறைக்கும் – இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதில் மிக முக்கிய மைல் கல்லாக அமையுமெனவும் அவர் கூறினார்.

இந்தியா – இலங்கை பயணிகள் கப்பல் சேவையானது போக்குவரத்து தொடர்பை மேம்படுத்துவதோடு, வர்த்தகத்தையும் ஊக்குவிக்குமென அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியா – இலங்கை இடையேயான கடல்வழி போக்குவரத்திற்கு சங்க இலக்கியங்களான பட்டினப்பாலை, மணிமேகலை ஆகியவற்றில் சான்று இருப்பதாக பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.

இதேவேளை, அங்குரார்ப்பண நிகழ்வில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கை துறைமுகங்கள், கப்பற்றுறை, சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்டோர் காணொளி வாயிலாக கலந்துகொண்டிருந்தனர்.

இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனா, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட பலரும் நேரடியாக கொடியசைத்து பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பித்து வைத்தனர்.

செரியாபாணி பயணிகள் கப்பல் 50 பயணிகளுடன் காங்கேசன்துறையை பிற்பகல் 12.15 அளவில் வந்தடைந்தது.

துறைமுகங்கள், கப்பற்றுறை, சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் கப்பலை வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதேவேளை, செரியாபாணி பயணிகள் கப்பல் இன்று பிற்பகல் 2 மணிக்கு நாகப்பட்டினம் நோக்கி பயணத்தை ஆரம்பித்தது. 

செரியாபாணி கப்பல் மாலை 5 மணிக்கு நாகபட்டினம் துறைமுகத்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 
 
கேரளாவின் கொச்சியில் 25 கோடி இந்திய ரூபா செலவில் செரியாபாணி கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.

14 ஊழியர்களும், 150 பயணிகளும் ஒரு தடவையில் இந்தக் கப்பலில் பயணிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணி ஒருவர் 50 கிலோகிராம் பொதியை இலவசமாக எடுத்துச்செல்ல முடியும்.

நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பலில் பயணிப்பதற்கு ஒருவருக்கு ஒரு வழி கட்டணமாக 27 ஆயிரம் ரூபாவும் இரு வழி கட்டணமாக 53,500 ரூபாவும் அறவிடப்படுகின்றது.

குளிரூட்டப்பட்ட கப்பலில், பயணிகளுக்கு தேவையான சிற்றுண்டி, தேநீர்,  குளிர்பானத்தை கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Reported by :S.Kumara

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *