பிரபலங்கள் முறைகேடாக வெளிநாடுகளில் பல கோடி ரூபா முதலீடு செய்துள்ளதும், சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதும் தொடர்பான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் வெளியாகி உலகளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்கள் வெளியாகி உள்ளன.
சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு மூலம் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. நிதி சேவை வழங்கும் 14 நிறுவனங்களில் இருந்து கசிந்த ஒரு கோடியே 19 லட்சம் ஆவணங்களை 600-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் புலனாய்வு செய்து இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
இதில் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதும், சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதும் அம்பலமாகி உள்ளது.
இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ஜோர்டான் மன்னர், செக்குடியரசு பிரதமர் உள்ளிட்ட சுமார் 35 தற்போதைய மற்றும் முன்னாள் அரசியல் தலைவர்கள் பெயர் இடம்பெற்று உள்ளன.
இம்ரான்கானுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இம்ரான்கான் அமைச்சரவையில் நிதி அமைச்சரான பயாஸ் அகமது கரீப், அவரது குடும்பத்தினர் மற்றும் சில அமைச்சர்கள் கோடிக்கணக்கான பணத்தில் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளை ரகசியமாக வைத்திருப்பது தெரியவந்தது.
ஜோர்டான் மன்னர் அப்துல்லா வெளிநாடுகளில் ரூ.745 கோடிக்கு சொத்து குவித்ததற்கான ஆவணங்களும் வெளியாகி உள்ளன. அவர் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் 14 ஆடம்பர பங்களாக்களை ரகசியமாக வாங்கியுள்ளார். மேலும் 38 போலிக் கம்பெனிகளை உருவாக்கி உள்ளார்.
செக்குடியரசு பிரதமர் ஆந்த்ரே பேபிஸ் பிரான்சின் தெற்கு பகுதியில் ரூ.163 கோடி மதிப்பில் ஆடம்பரமான சொத்துக்களை வாங்கி இருந்ததும் தெரிய வந்தது. இந்த சொத்துக்களை அவர் முறையாக தெரிவிக்காததும் அந்த ஆவணத்தில் இடம் பெற்று உள்ளது.
இந்த வார இறுதியில் செக் குடியரசில் தேர்தல் நடக்கிறது. இந்த நேரத்தில் அவரது பெயர் பண்டோரா பேப்பர்ஸ் பட்டியலில் இடம் பெற்றது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அஜர்பைஜான் அதிபர் இல்காம் அலியேனின் குடும்பத்தினர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் இங்கிலாந்தில் கோடிக்கணக்கான ரூபா மதிப்பில் சொத்துக்களை ரகசியமாக வாங்கியுள்ளனர்.
கென்ய அதிபர் உஹுரு கென்யாட்டா மற்றும் அவரது குடும்பத்தினர் ரகசியமாக வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பெயர் நேரடியாக இடம்பெறவில்லை. ஆனால் மொனாக்கோவில் அவரது கூட்டாளிகள் ரகசியமாக சொத்து சேர்த்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
——————
Reported by : Sisil.L