கனடாவில் கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத அரச ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவில் கொவிட் தொற்று வேகமாகப் பரவிய நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அத்துடன், தடுப்பூசி திட்டமும் விரைவுபடுத்தப்பட்டிருந்தது. பல்வேறு நடவடிக்கைகள் மூலம் அங்கு கொவிட் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத அரச ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மேலும் தெரிவித்துள்ளதாவது,
கனடாவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அரசு ஊழியர்கள் சம்பளமில்லாத விடுமுறையில் அனுப்பி வைக்கப்படுவர். ஒக்டோபர் 29ஆம் திகதிக்குள் ஊழியர்கள் முழுமையான தடுப்பூசியை செலுத்திக் கொண்ட நிலையை ஒன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
அதேபோல், விமானம், ரயில் மற்றும் கப்பலில் பயணம் செய்ய தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழைக் காண்பிக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு கட்டாய தடுப்பூசி மற்றும் பயண நடவடிக்கைகள் கொவிட் பரவலைத் தடுப்பதில் வலிமையானவையாக இருக்கும்.
ஆகையால், நீங்கள் தடுப்பூசி போட்டிருந்தால் கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பாக, சுதந்திரத்தைப் பெற தகுதியானவர்கள் என்று அர்த்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
———–
Reported by : Sisil.L