கனடாவை உலுக்கிய கோடீஸ்வர தம்பதியரின் கொலையாளியின் படத்தை வெளியிட்ட பொலிஸார்

கனடாவின் ரொறன்ரோ கோடீஸ்வரத் தம்பதியைக் கொலை செய்த வழக்கில் தேடப்படும் சந்தேக நபரின் புகைப்படம் உள்ளிட்ட ஆதாரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.


குறித்த விவகாரம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள பொலிசார், சம்பவம் நடந்த 2017 டிசம்பர் மாதம் குறித்த தம்பதியின் குடியிருப்பின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமெராவில் அடையாளம் தெரியாத நபரின் காட்சிகள் பதிவாகியிருந்தன.


இந்த நிலையில், குறித்த கமெராவில் பதிவாகியிருந்த பல மணி நேர காட்சிகளை ஆய்வுக்குட்படுத்தியுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. அந்தக் காணொளிப் பதிவுகளில் ஒருவர் மட்டும் தனித்துக் காணப்பட்டதாகவும், எஞ்சியவர்கள் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


அப்பகுதியில் அந்த மர்ம நபரின் நோக்கம் என்னவென்பது தொடர்பில் தங்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை எனவும், அந்த மர்ம நபரின் நடவடிக்கைகள் சந்தேகத்தை மட்டுமே ஏற்படுத்துவதாக அமைந்திருந்தன எனவும் பொலிஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.


கொலை நடந்த டிசம்பர் 13ஆம் திகதி மதியத்துக்கு மேல் அல்லது இரவு குறித்த காட்சிகள் பதிவாகியிருக்கலாம். உடற்கூறாய்வு முடிவுகளில், குறித்த கோடீஸ்வர தம்பதி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.


ரொறன்ரோ கோடீஸ்வர தம்பதி பாரி (Barry – 75) மற்றும் ஹனி ஷெர்மன் (Honey – 70) ஆகியோர் நோர்த் யார்க்கில் அமைந்துள்ள தங்கள் குடியிருப்பிலிருந்து சடலமாக மீட்கப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில் இது ஒரு தற்கொலை – கொலையாக இருக்கலாம் என்றே விசாரணை அதிகாரிகள் கருதினர். ஆனால் அதன் பின்னர், இது இரட்டைக் கொலை என பொலிஸார் முடிவுக்கு வந்தனர்.

 

இந்த வழக்கில் தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்ட பொலிசார், குறித்த மர்ம நபர் தொடர்பில் பொதுமக்களின் உதவியை நாடுவதாகக் கூறியுள்ளனர்.

——————————

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *