பிரிட்டிஷ் கொலம்பியாவின் தலைநகர் விக்டோரியாவிலிருந்து 155 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள லிட்டன் என்ற கிராமத்தில் அதிகபட்சமாக 49.5 பாகை செல்சியஸ் வெப்பம் பதிவானது. பனி மழை மற்றும் பனிக்காற்று கனடிய நாட்டு மக்களுக்கு பழகிப்போன ஒன்று. ஆனால் வழக்கத்துக்கு மாறாக கனடாவில் தற்போது கடும் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. அங்கு வரலாறு காணாத வகையில் வெப்பம் பதிவாகியுள்ளது.
கனடாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் தலைநகர் விக்டோரியாவிலிருந்து 155 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள லிட்டன் என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக 49.5 பாகை செல்சியஸ் வெப்பம் பதிவானது. வரலாறு காணாத இந்த வெப்பம் காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் கடுமையான பாதிப்பை எதிர் கொண்டுள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் பிரதமர் ஜான் ஹொர்கன் ‘‘மாகாணம் இதுவரை அனுபவித்த வெப்பமான வாரம் குடும்பங்களுக்கும் சமூகங்களுக்கும் பேரழிவு தரும் விளைவுகளுக்கு வழிவகுத்தது’’ என்றார். இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி தற்போது வரை வெப்பம் காரணமாக 130 பேர் உயிரிழந்ததாக பிரிட்டிஷ் கொலம்பியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வன்கூவர் நகரில் மட்டும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இப்போது வரை 65 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
வன்கூவர் நகரின் பொலிஸ் அதிகாரி இதுபற்றிக் கூறுகையில் ‘‘உங்களுடைய நண்பர்கள், அண்டை வீட்டார், குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக வயோதிபர்கள் இருந்தால், அவர்களின் நிலைமையைக் கவனியுங்கள். இந்த வெப்பநிலை நமது சமூகத்துக்கு மிக மோசமானதாக உள்ளது. அதுவும் உடல் நல பிரச்சினைகளை எதிர்கொண்டவர்களுக்கும் வயோதிபர்களுக்கும் இது மிகப்பெரிய பிரச்சினை’’ எனக் கூறினார்.
Reported by : Sisil.L