கட்டுப்பாட்டை மீறிய முட்டை விலை 

கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், உள்ளூர் முட்டைகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதை நிறுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளை முட்டைக்கு 44 ரூபாவும் சிவப்பு முட்டைக்கு 48 ரூபாவும் கட்டுப்பாட்டு விலையை விதிக்க வர்த்தக அமைச்சு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது.

எவ்வாறாயினும், நேற்று (06) வரை சில கடைகளில் முட்டை 60 ரூபாவுக்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குறிப்பிட்டுள்ளனர்.

முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை விதித்ததையடுத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை தொடர்ச்சியான சோதனைகளை மேற்கொண்டதால், சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மீண்டும் உள்ளூர் சந்தைக்கு முட்டைகளை வெளியிட மொத்த வியாபாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரிகளுக்கு மாத்திரம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தையில் மீண்டும் முட்டைகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை உள்ளுர் சந்தைக்கு வெளியிட நடவடிக்கை எடுத்தால், உள்ளுர் முட்டைகள் இவ்வளவு அதிக விலைக்கு விற்கப்படாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பல மாதங்களாக கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளமையினால் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு கட்டுப்பாட்டு விலையானது அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்கு நிர்ணயம் செய்யப்படுகின்ற நிலையில், அந்த காலத்தை கடந்து செல்லும் போது கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்ட பொருளின் விலையும் அதிகரிக்கிறது.

எவ்வாறாயினும், தற்போதைய நிலவரங்கள் குறித்து அத தெரண, நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் வினவியதுடன், அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி தொடர்ச்சியாக சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருவதாக  குறிப்பிட்டுள்ளது.

Reported by :S.Kumara

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *