ஒருகொடவத்தை – அம்பத்தளை வீதி புனரமைப்பு பணிகளை 3 மாதங்களில் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை

ஒருகொடவத்தை – அம்பத்தளை வீதியின் புனரமைப்பு பணிகளை மூன்று மாதங்களுக்குள் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த வீதியின் புனரமைப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்த மீளாய்வு கலந்துரையாடல், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (16) முற்பகல் இடம்பெற்றபோது, அதில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

இந்த செயற்திட்டத்தின் தாமதத்திற்கு காரணமான விடயங்கள் தொடர்பில் தனித்தனியாக ஆராய்ந்து, ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

திட்டப் பணிகள் பாதிக்கப்படுவதற்கு மக்களின் பிரச்சினைகள் காரணமாக அமைந்திருந்தால், அவற்றுக்கு தீர்வு காண முன் வருமாறு அப்பகுதி அரசியல் பிரமுகர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

வெளிநாட்டு உதவியுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 

ஒருகொடவத்தை – அம்பத்தளை வீதியை 7.7 கிலோமீட்டர் நீளத்தில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் 2020 ஆம் ஆண்டு நிறைவடையவிருந்தது. 

எனினும், ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்ட நிறுவனத்தின் சிக்கல்கள், இந்த திட்டத்திற்காக அகற்றப்பட்ட வீடுகளுக்கான நட்டஈடு வழங்கல், குறித்த வீதியில் பொறுத்தப்பட்டுள்ள நீர்க்குழாய்களால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் உள்ளிட்ட காரணிகளால் உரிய காலத்தில் அதனை பூர்த்தி செய்ய முடியாமல் போயுள்ளது. 

Reported by :S.Kumara

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *