ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான நிலைமாறுகால நீதி (Transitional Justice) குறித்து கலந்துரையாடப்பட்டது.
மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடருக்கு இணையாக இந்த கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.
இதன்போது, பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக மீளப் பெற வேண்டுமென அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இன்று மீண்டும் வலியுறுத்தின.
நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள சிரமங்களை அரசாங்கம் கவனத்திற்கொண்டுள்ளதாகவும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்த வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நீண்ட கால பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக இலங்கை அரசாங்கம் ஒவ்வொரு நெருக்கடியையும் முன்னுரிமைகளின் அடிப்படையில் தீர்த்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள போதிலும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, அனைத்து சமூகங்களிலும் நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய அம்சங்கள் உள்ளடக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுதந்திரமான உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடு, சிவில் சமூக பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக பிரித்தானிய மற்றும் வடக்கு அயர்லாந்திற்கான பிரதிநிதி தெரிவித்தார்.
இதேவேளை, பாதுகாப்பு பிரிவினரால் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படும் விதம், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தடுத்துவைக்கப்படுகின்றமை, ஊழல் மீண்டும் உருவாகியுள்ளமை தொடர்பில் தமது நாடு அவதானித்து வருவதாக அமெரிக்க பிரதிநிதி இதன்போது கூறினார்.
எனவே, பயங்கரவாத தடைச் சட்டத்தை புதிதாக மாற்றியமைக்குமாறும் தன்னிச்சையாக தடுத்து வைக்கும் செயற்பாட்டை நிறுத்துமாறும் சர்வதேச மனித உரிமை நிலைப்பாட்டிற்கமைய கருத்து சுதந்திரத்தை வழங்கும் சட்டத்தை கொண்டு வருமாறும் இலங்கை அரசாங்கத்திற்கு பரிந்துரைப்பதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், மத மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தவும் வலியுறுத்துவதாக அமெரிக்க பிரதிநிதி இன்று சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, இன்றைய கலந்துரையாடலின் போது 03 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டை ஊக்குவித்தல், பிரஜைகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துதல் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்துதல் முதலாவது பரிந்துரையென சீன பிரதிநிதி தெரிவித்தார்.
அரசியல், பொருளாதார மற்றும் சமூகத்துறைகளில் பெண்கள் பங்கேற்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்குதலை இரண்டாவது பரிந்துரையாகவும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றுவதை மூன்றாவது பரிந்துரையாகவும் அவர் முன்வைத்தார்.
இதேவேளை, இந்தியாவினாலும் இலங்கை தொடர்பிலான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த எடுக்கப்பட்ட கொள்கைகள் அவ்வாறே அமுல்படுத்தப்பட வேண்டும்,
வறுமையை ஒழிக்கவும், பாதிக்கப்படக்கூடிய சமூகக் குழுக்களின் மீதான தாக்கத்தை குறைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும், இதில் இந்திய வம்சாவளி தமிழ் மக்களையும் உள்ளடக்க வேண்டும்,
அனைத்து பிரஜைகளின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்,
13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும்
என்பன இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளாகும்.
அத்துடன், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதும் முக்கியமென இந்தியா நம்புவதாக இந்தியாவிற்கான பிரதிநிதி இன்றைய கலந்துரையாடலில் தெரிவித்தார்.
இந்த பரிந்துரைகள் மற்றும் கருத்துகளுக்கு இலங்கை சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் பதில் வழங்கினார்.
அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனைத்து பிரஜைகளுக்கும் உள்ள உரிமையை இலங்கை அங்கீகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பிற்கு உட்பட்டு சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை மதித்து அதிகாரிகளால் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
Reported by :Maria.S