எதிர்வரும் 02 நாட்களுக்குள் மண்ணெண்ணெய் விநியோகத்திலுள்ள தாமதத்தை முழுமையாக நீக்க அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காக 74 மண்ணெண்ணெய் பௌசர்கள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக 49 தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்கள், 18 கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் ஏனைய 07 எரிபொருள் நிலையங்கள் ஊடாக மீனவர்களுக்காக மண்ணெண்ணெய் தொடர்ந்தும் விநியோகிக்கப்படவுள்ளது.
அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் பணம் செலுத்தாமையினால், நேற்று மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படாத அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் இன்று மண்ணெண்ணெய் விநியோகிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மீனவர் சமூகத்திற்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் கண்காணிக்கும் அதிகாரம் மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் விநியோகம் நாளை (24) முதல் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்புமென நம்பிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எரிபொருள் தேவை தொடர்பில் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்களினாலும் கடற்றொழில் திணைக்களத்தினாலும் ஆராயப்பட்டுள்ளது.மீன்பிடி நடவடிக்கைகளுக்கான எரிபொருளை பெறுவதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின், சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் அல்லது மாகாண செயலாளர்கள், கூட்டுறவு செயலாளர்களிடம் கோரிக்கை விடுக்குமாறு ஜனாதிபதியின் சமூக விவகார பிரிவினால் மீனவ சங்கங்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Reported by :Maria.S