கொழும்பு துறைமுகத்தில் இரகசியமான முறையில் கப்பல் ஒன்றில் ஏறியதாகக் கூறப்படும் நான்கு இளைஞர்கள், கப்பல் சூயஸ் கால்வாயை கடந்துகொண்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை பொலிஸாரிடம் நேற்று (10) ஒப்படைக்கப்பட்ட குறித்த இளைஞர்கள், காலி பதில் நீதவான் பிரேமரத்ன திரானகம முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, ஏப்ரல் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த, லைபீரியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல் ஒன்றில் நான்கு இளைஞர்களும் இரகசியமான முறையில் கடந்த மாதம் 24 ஆம் திகதி ஏறியுள்ளனர்.
அமெரிக்காவை நோக்கிச் சென்ற குறித்த கப்பல் சூயஸ் கால்வாயை கடந்துகொண்டிருந்த போது, அதிலிருந்த இளைஞர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கப்பல் ஊழியர்களாக மாறுவேடத்தில் இருந்தமையும் தெரியவந்துள்ளது.
குறித்த நான்கு இளைஞர்களையும் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்காக சீனாவில் இருந்து இலங்கை நோக்கி வந்துகொண்டிருந்த மற்றுமொரு கப்பலில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சீன கப்பலின் அதிகாரிகள் காலி துறைமுகத்திற்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் நான்கு இளைஞர்களையும் இலங்கை அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைத்துள்ளனர்.
குறித்த இளைஞர்கள் முல்லைத்தீவு, சுன்னாகம், ஊர்காவற்றுறை, வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் கொழும்பு துறைமுகத்தில் எவ்வாறு கப்பலில் ஏறினார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்காக, விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
Reported by:Maria.S