19.8 பில்லியன் அமெரிக்க டொலர் உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதற்கான திட்டத்தை மத்திய வங்கி ஆளுநர் ஊடகங்களுக்கு இன்று தௌிவுபடுத்தினார்.
இந்த செயற்பாட்டின் போது, வங்கிக் கட்டமைப்பில் எந்த வகையிலும் கை வைக்கப்போவதில்லை என அவர் உறுதியளித்தார்.
மத்திய வங்கி கொள்வனவு செய்துள்ள அரசாங்கத்தின் பிணையங்கள், ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளிட்ட ஓய்வூதிய நிதியங்களிடமிருந்து கொள்வனவு செய்துள்ள அரச பிணையங்கள் மாத்திரம் இந்த செயற்பாட்டினுள் உள்வாங்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தௌிவுபடுத்தினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்ததலால் வீரசிங்க, திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன, பிரதி திறைசேரி செயலாளர் A.K.செனவிரத்ன, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளியல் ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்ததாவது,
”வங்கிகளில் உள்ள வைப்புகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என கருதி அதனை மீளப்பெற முயன்றால் பொருளாதாரம் வீழ்ச்சியடையும். ஆகவே, வங்கி கட்டமைப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்தாது, வைப்பீட்டாளர்களின் 57 பில்லியன் ரூபா பணத்தை பாதுகாப்பது முக்கியமாகும். பொருளாதார, சமூக பாதுகாப்பிற்கு வங்கி வைப்பீட்டாளர்களின் வைப்பீடுகளை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. அதனையே வங்கி கட்டமைப்பின் மீது கைவைக்க வேண்டியதில்லை என கூறினேன். நாம் உத்தேசித்துள்ள வகையில் ஓய்வூதிய நிதியங்கள் வங்கிகளை விட குறைவாக வரி செலுத்தும் 14% வட்டிக்கு உட்படுத்தப்பட்டுள்ள EPF உள்ளிட்ட ஓய்வூதிய நிதியங்கள், தனிப்பட்ட ரீதியில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் திறைசேரி முறிகள் அனைத்தையும் அரசாங்கம் கைப்பற்றி புதிதாக முறிகளை விநியோகிக்கவுள்ளது”
தற்போது உள்நாட்டில் அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ள மொத்த கடன் தொகை 35.4 பில்லியன் அமெரிக்க டொலராகும்.
இதில் 11.4 பில்லியன் டொலர், குறுகிய கால கடனை பெறுவதற்காக பயன்படுத்தப்படுகின்ற திறைசேரி பத்திரங்கள் ஊடாக பெறப்பட்டுள்ளது.
நீண்டகால கடனை பெறுவதற்கான நடைமுறையாக உள்ள திறைசேரி முறிகளை விநியோகிப்பதன் ஊடாக பெறப்பட்டுள்ள கடன் தொகை 24 பில்லியன் டொலராகும்.
திறைசேரி பத்திரங்கள் ஊடாக மத்திய வங்கி கொள்வனவு செய்துள்ள 62.4 வீதமான கடனை நீண்டகால கடனாக மாற்றுவதற்கு உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த திறைசேரி பத்திரங்கள் திறைசேரி முறிகளாக மாற்றப்படவுள்ளன.
இதனைத் தவிர, ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளிட்ட ஓய்வூதிய நிதியங்களிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள பிணையங்களை மீண்டும் விநியோகிப்பதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிதியங்கள் அதிகளவில் திறைசேரி முறிகளை கொள்வனவு செய்துள்ளன.
திறைசேரி முறிகளில் 36.5 வீதம் ஊழியர் சேமலாப நிதியத்திடம் உள்ளது. அரசாங்கத்தின் இந்த பிணையங்களை புதிய பிணையங்களாக மீண்டும் விநியோகிப்பதற்கும் கடன் மறுசீரமைப்பு திட்டத்தின்கீழ் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாட்டிற்கு இணக்கம் தெரிவிக்காத ஓய்வூதிய நிதியங்களுக்கு 30% வரியை விதிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
Reported by :S.Kumara