யிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள அறிவித்தலை வலுவிழக்க செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு தாக்கல் செய்துள்ளார்.
குறித்த வழக்கின் சந்தேகநபராக தமது பெயரை குறிப்பிட்டு, எதிர்வரும் 14 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து, கடந்த 16 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட கட்டளையை வலுவிழக்க செய்யுமாறு மனுவில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தமக்கு எவ்வித தொடர்புகளும் இல்லாத நிலையில், அது குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட மனு ஒன்றின் பிரதிவாதியாக தாம் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டமை நீதியான விடயம் அல்லவெனவும், இயற்கை நீதிக்கு புறம்பான செயல் எனவும் தெரிவித்து இந்த எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவின் பிரதிவாதிகளாக கோட்டை நீதவானும் பதிவாளரும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் பலத்த காயமடைந்து, கால் ஒன்றை இழந்த நபர் மற்றும் அருட்தந்தை சிறில் காமினி ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு எதிராக குறித்த எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Reported by :Maria.S