உக்ரைனின் கீவ் நகருக்கு வெளியே புச்சா நகரில் 300 பேரை ஒரே இடத்தில் பெரிய குழியில் புதைத்து விட்டோம் என நகர மேயர் பெடோருக் கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யப் படைகளின் தாக்குதல் தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், இந்த வாரம் புச்சா நகரை உக்ரேனியப் படைகள் மீண்டும் கைப்பற்றின. அந்நகரம் ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்ததால், ஏறக்குறைய ஒரு மாதமாக அந்த நகரத்துக்கு உக்ரேனியர்கள் யாரும் செல்ல முடியவில்லை.
இந்த சூழலில், புச்சா நகரில், 280 பேரின் உடல்களை பெரிய குழிகளில் ஒரே இடத்தில் போட்டு புதைத்துள்ளோம் என்று மேயர் அனடோலி பெடோருக் கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறும்போது, புச்சா நகரில் ஒரு தெருவில் நேற்று 20 ஆண்களின் உடல்கள் கிடந்தன. அவர்கள் அனைவரும் தலையின் பின்புறத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பலியானவர்களில் ஆண்களும், பெண்களும் இருந்தனர். அவர்களில் 14 வயது சிறுவனும் இருந்துள்ளான் என்று பெடோருக் கூறினார்.
கொல்லப்பட்டவர்களில் சிலர் புச்சாங்கா ஆற்றைக் கடந்து உக்ரேனிய கட்டுப்பாட்டு பகுதிக்குச் செல்ல முயன்றபோது கொல்லப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார். ரஷ்ய ஆக்கிரமிப்பின் விளைவுகளால் ஏற்பட்டவை இவை என்று அவர் வேதனையுடன் கூறினார்.
ரஷ்யப் படைகளுக்கு எதிரான போரில் பொதுமக்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்று கூற முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அந்த உடல்கள் இன்னும் தெருவிலேயே கிடக்கின்றன. வீரர்கள் அனுமதி கிடைத்ததும், 3 அல்லது 4 நாட்களில் உடல்களை அதிகாரிகள் அப்புறப்படுத்துவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
—————
Reported by : Sisil.L