உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி போர் தொடுத்தது. கடந்த 68 நாட்களாக போர் நீடித்து வருகிறது.
உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இதனால் ரஷ்யா உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
உக்ரைனின் கிழக்குப் பகுதியை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ரஷ்யா தாக்குதலை நடத்தியது. கிழக்கு உக்ரைனில் உள்ள கிளர்ச்சியாளர்கள் ரஷ்யாவுக்கு ஆதரவாக உள்ளனர். அங்குள்ள மரியுபோல் நகரைக் கைப்பற்ற ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தியது.
இதன் மூலம் அந்த நகரம் ரஷ்யாவிடம் வீழ்ந்தது. மரியுபோலில் 10 கிலோ மீற்றர் பரப்பளவில் மிகப் பெரிய இரும்புத் தொழிற்சாலை இருக்கிறது. அங்கு ஆயிரக்கணக்கான பொது மக்களும் உக்ரைன் இராணுவ வீரர்களும் இருக்கிறார்கள்.
அவர்களை வெளியேற்றும் பணி நேற்று தொடங்கியது. இதுவரை சுமார் 200 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த இரும்புத் தொழிற்சாலைக்குள் இருக்கும் உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து ரஷ்ய வீரர்களை தாக்கி வருகிறார்கள்.
அவர்களைச் சரணடையுமாறு ரஷ்யா எச்சரித்தது. உக்ரைன் வீரர்கள் சரணடைய மறுப்பதால் அங்கு தீவிர சண்டை நடந்து வருகிறது.
Reported by : Sisil.L