ஈழத்தின் பிரபல பாடகர் வர்ண ராமேஸ்வரன் கொரோனா தொற்று காரணமாக நேற்று கனடாவின் ரொறன்ரோவில் காலமானார்.யாழ்ப்பாணம் அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட வர்ண ராமேஸ்வரன் அளவெட்டி சீனன் கோட்டை ஞானோதய வித்தியாசாலை, தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியில் கல்வி பயின்றார். கர்நாடக சங்கீதத்தை முறைப்படி கற்ற அவர் வீணை, வயலின், மிருதங்கம் போன்ற இசைக் கருவிகளையும் கற்றுத் தேர்ந்தார். பின்னாளில் யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் இசைக் கலாமணி பட்டம் பெற்ற அவர் பின்னாளில் ஐந்து ஆண்டுகள் இசை விரிவுரை யாளராகவும் கடமையாற்றினார்.தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்த இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை, பண்பாட்டுப் பிரிவால் வெளியிடப்பட்ட இசைப் பேழைகளில் பல பாடல்களைப் பாடி வந்தார்.
மாவீரர் நாளை புலிகள் கட்டமைப்பு ரீதியாக கடைப்பிடிக்க ஆரம்பித்த போது கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுதிய “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே”என்ற பாடலை இவரே பாடினார். துயிலும் இல்லப் பாடலாகப் போற்றப்படும் இந்தப் பாடலே மாவீரர்களை துயிலும் இல்லத்தில் விதைக்கும்போதும், மாவீரர் நாளில் தீபம் ஏற்றும்போதும் ஒலிக்க விடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
———-
Reported by : Sisil.L