ஈக்குவடோர் நாட்டில் குவாகுயில் நகரச் சிறையில் கடந்த 28ஆம் திகதி இரு போட்டிக் கும்பல்கள் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலின்போது இரு கும்பல்களும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் தொடுத்தனர்.இதில் 24 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால் பலி எண்ணிக்கை 100-ஐக் கடந்து 116 ஆக பதிவாகி உள்ளதாக இப்போது கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.
இந்த மோதலில் 5 கைதிகள் தலைகள் துண்டிக்கப்பட்டதாகவும், மற்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. பொலிஸ் உயர் அதிகாரி பாஸ்டோ புவானாகோ இந்த மோதல் பற்றி கூறுகையில், “கைதிகள் கையெறி குண்டுகளை சரமாரியாக வீசி உள்ளனர். 400 பொலிசார் திரண்டு வந்த பின்னர்தான் நிலைமை கட்டுக்குள் வந்தது. மோதலில் ஈடுபட்ட கைதிகள், ஒரு பிரிவில் இருந்து இன்னொரு பிரிவுக்கு போவதற்கு சுவரை துளை போட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
ஈக்குவடோர் சிறைத்துறை இயக்குனர் பொலிவர் கார்சான் கூறும்போது, “இந்த மோதல் மிகப் பயங்கரமானது. கையெறி குண்டு வீச்சு, துப்பாக்கிச்சூடு, குண்டு வெடிப்புகள் நடந்துள்ளன” எனத் தெரிவித்தார். 80 கைதிகள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
ஈக்குவடோரில் செயற்பட்டு வருகிற மெக்சிகோவைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் கட்டளையின் பேரில் தான் இந்த மோதல் வெடித்ததாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.
இந்தப் பயங்கர சம்பவத்தை அடுத்து அந்த நாட்டிலுள்ள சிறைகள் அமைப்பில் அவசரகால நிலையை ஜனாதிபதி கில்லர்மோ லாசோ பிறப்பித்துள்ளார்.
Reported by : Sisil.L