இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் வழங்குகிற நடைமுறையில் உள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பேன்; நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் வழங்கக் கூடிய ஆட்சி முறையை கொண்டுவருவேன் என எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச வாக்குறுதி அளித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச களம் காண்கிறார்.
இலங்கையில் அடுத்த மாதம் 21-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இடதுசாரித் தலைவர் அனுர குமார திசநாயக்க, மகிந்த ராஜபக்சே மூத்த மகன் நாமல் ராஜபக்சே, 7 தமிழ்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் அரியநேந்திரன், இந்திய வம்சாவளித் தமிழர் திலகராஜ் உள்ளிட்டோர் கலம் காண்கின்றனர். இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது
இலங்கையின் ருவன்வெல்ல என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தாம் இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றால் ஜனாதிபதிக்கு அதிக அதிகாரம் தரக் கூடிய ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்துக் கட்டுவேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களுக்கு- நாடாளுமன்றத்துக்குதான் அதிக அதிகாரம் தரப்பட வேண்டும். அதற்கான சட்டங்களை நடைமுறைப்படுத்துவோம் என்றார். இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே நாளை மறுநாள் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்க உள்ளார். ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவாக டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட தமிழ்க் கட்சித் தலைவர்கள் சிலர் பிரசாரம் செய்து வருகின்றனர். ரணில் விக்கிரமசிங்கேவை ஆதரித்து அனுராதபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கு இனிதான் நல்ல காலம் பிறக்க இருக்கிறது. நாட்டை பொருளாதாரப் பேரழிவில் இருந்து மீட்டு எழுச்சிக்கு வழிவகுத்தவர் ரணில் விக்கிரமசிங்கே. ஆகையால்தான் ரணில் விக்கிரமசிங்கேவுடன் இணைந்து பயணிக்கிறோம் என்றார்.
Reported by:S.Kumar