அடுத்த எண்ணெய் தாங்கி தரையிறங்கும் திகதி அல்லது திட்டம் தொடர்பில் உறுதியான தகவல்கள் எதுவுமில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் டொலர் தட்டுப்பாடு காரணமாக பெற்றோலியக் கப்பல்களுக்கு பணம் செலுத்த முடியாத நிலையே இதற்குக் காரணம்.
இன்று இலங்கையில் பெற்றோலுக்காக நீண்ட வரிசைகள் காணப்படுவதுடன் 10,000 தொன்னுக்கும் குறைவான பெற்றோல் இருப்புகளே கிடைக்கின்றன. நாட்டின் சராசரி தினசரி எரிபொருள் நுகர்வு 3000 மெட்ரிக் தொன் ஆகும்.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் வரவிருந்த எண்ணெய் தாங்கி வரும் 21ஆம் திகதி வரவுள்ளது. ஆனால் அதன் வருகை இன்னும் உறுதியாகவில்லை.
மற்றொரு எண்ணெய் தாங்கி கொழும்பு துறைமுகத்துக்கு வெளியே நங்கூரமிடப்பட்டுள்ளதுடன், அதற்கான பணம் செலுத்துவதற்கு போதிய நிதி இல்லாத காரணத்தினால், அது தரையிறங்குவது மேலும் தாமதமாகியுள்ளது.
இதேவேளை, நாட்டுக்குத் தேவையான எரிபொருளுக்கான விலை மனு கோரப்பட்ட போதிலும், எந்தவொரு விநியோகஸ்தரும் முன்வரவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
விநியோகஸ்தர்களுக்கு இதுவரை 735 மில்லியன் டொலர் செலுத்த வேண்டியதன் காரணமாக இது ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
எரிபொருள் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்களை கூட்டுத்தாபனம் கோரியுள்ள போதிலும், விநியோகஸ்தர்கள் கிடைக்காததால் எரிபொருள் விநியோகம் எதிர்காலத்தில் பெரும் சவாலாக அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
——
Reorted by:Anthonippillai.R