மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து இன்று சனிக்கிழமை(30) காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
குறித்த போராட்டமானது கடந்த 23-03-2022 அன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மீது அரச படையினர் மேற்கொண்ட அராஜகத்தை எதிர்த்து இடம் பெற்றது.
குறித்த போராட்டத்தில் மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி மனுவல் உதயச்சந்திரா, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள்,உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசே காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் சொல்,காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே?, சர்வதேச விசாரணை வேண்டும்,இராணுவத்தின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே?,20ஆம் திருத்தத்தை நீக்கு உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
——————
Reported by : Sisil.L