இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ள சீனாவின் Shi Yan 6 ஆய்வுக் கப்பல்

சீனாவின் Shi Yan 6 ஆய்வுக் கப்பல் இன்று(25) கொழும்பு துறைமுகத்தை வந்தடையுமென வௌிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த 11 ஆம் திகதி சீனாவில் இருந்து பயணத்தை ஆரம்பித்த Shi Yan 6 கப்பல் இன்று இலங்கையை வந்தடையுமென கடற்படை முன்னர் தெரிவித்திருந்தது.

இந்த கப்பலின் வருகை தொடர்பில் இந்தியா தொடர்ச்சியாக கண்காணித்து வந்த நிலையில், அது தொடர்பில் உயர்மட்ட அதிகாரிகளுக்கு இராஜதந்திர ரீதியில் தகவல் வழங்கியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

இதனால் Shi Yan 6 கப்பல் இலங்கைக்கு வருவது நிச்சயமற்றதாகக் காணப்பட்டது.

இந்தநிலையில் Shi Yan 6 கப்பலுடன் இணைந்து ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ருஹுணு பல்கலைக்கழகம் அதிலிருந்து விலகியது.

இந்த பின்னணியில், கப்பலின் வருகையை அடுத்த மாத இறுதி வரை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்ததுடன், வெளிவிவகார அமைச்சும் அதனை உறுதிப்படுத்தியது.

எவ்வாறாயினும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு அருகில், இந்து சமுத்திரத்தில் ஆய்வு அல்லது கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த Shi Yan 6 கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை அண்மித்தது.

Reported by:S.Kumara

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *