நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வட மேல் மற்றும் வடக்கு மாகாணங்களின் சில பிரதேசங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது
.பலத்த மழை காரணமாக தெதுரு ஓயா மற்றும் குக்குலே கங்க ஆகியவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.இன்று(01) காலை வேளையிலும் பலத்த மழை பெய்யுமாயின் களு கங்கையின் நீர்மட்டம் வௌ்ள நிலைமையை அண்மிக்கும் என முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
கடும் மழை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, எலபாத்த, குருவிட்ட பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் களு கங்கைக்கு அண்மையில் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். களு கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் புலத்சிங்கள – மொல்காவ வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தானியங்கி மழை அளவீடுகளின் தரவுகளின் பிரகாரம், இன்று(01) அதிகாலை 05 மணி வரை நாட்டில் அதிக மழைவீழ்ச்சி இரத்தினபுரி பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.இரத்தினபுரியில் 194.7 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.இரத்தினபுரி கிரிமலை பிரதேசம் மற்றும் களுத்துறை பாலிந்தநுவர நகரிலும் 192 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.இதேவேளை, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் கொழும்பு மாவட்டங்களின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு சிவப்பு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று(01) மாலை வரை நீடிக்கப்படடுள்ளது
Reported by :Maria.S