இலங்கையின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கான புதிய முதலீடுகள் தொடர்பில் நம்பிக்கை வைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் நேற்று(17) இடம்பெற்ற உலக பொருளாதார மன்ற பங்குதாரர்களின் கலந்துரையாடலின் ஒரு அங்கமான நிபுணர் கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான குறுகிய கால மூலோபாயமாக சுற்றுலா ஊக்குவிப்பு, விவசாய நவீனமயமாக்கல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இவற்றுக்காக இலங்கை தற்போது புதிய முதலீடுகளை ஈர்க்கும் நம்பிக்கையில் இருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
இலங்கையின் எதிர்கால நோக்கு மற்றும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான அணுகுமுறை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, இலங்கை இதுவரை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்தை கோடிட்டுக் காட்டியதுடன், இந்த ஆண்டு 2 வீத பொருளாதார வளர்ச்சியை இலங்கை எதிர்பார்ப்பதாகவும் அடுத்த வருடம் அதனை 5 வீதமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
அதேபோன்று IMF திட்டத்தின் பிரகாரம், அரசாங்க வருவாயை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள், வருவாய் சேகரிப்பு உத்திகளில் சீர்திருத்தம் மற்றும் வருவாய் ஆணைக்குழு உள்ளிட்ட நிறுவன ரீதியான கட்டமைப்பை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.
இதனிடையே, இந்திய கைத்தொழில் குழு மற்றும் உலக பொருளாதார மன்றம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த வட்டமேசை கலந்துரையாடலிலும் ஜனாதிபதி பங்கேற்றிருந்தார்.
நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் பல முக்கிய சவால்களை இலங்கையினால் வெற்றிகொள்ள முடிந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கு சுட்டிக்காட்டினார்.
விநியோகத்திற்கான தடைகளுக்கு வெற்றிகரமாக தீர்வு வழங்கல், இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குதல் மற்றும் அந்நிய செலாவணி பணப்புழக்கத்தை சீராக்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளின் மூலம் குறுகிய காலத்தில் சவால்களை சமாளிக்க முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுடனான பண்டங்கள் மற்றும் சேவைகள், சுங்க ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக வசதிக்கான திட்டங்களை முன்வைத்து இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
Reported by:S.Kumara