அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தை இடா புயல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தாக்கியதைத் தொடர்ந்து கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. புயல் கரை கடந்த போது வீசிய சூறைக்காற்றால் ஏராளமான வீடுகள் பாதிக்கப்பட்டன. கன மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. புயலின் தாக்கத்தினால் தொடர்ந்து கனமழை பெய்கிறது. இந்நிலையில், இடா புயலின் தாக்கத்தால் நியூயோர்க் நகரிலும் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. நேற்று முதல் இன்று அதிகாலை வரை மழை நீடித்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீதிகள் ஆறுகள் போன்று காட்சியளிக்கின்றன. சுரங்கப்பாதை ரெயில் நிலையங்களிலும் வெள்ளம் புகுந்தது. இதனால் நியூயார்க் நகரில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அருகிலுள்ள நேவார்க், லாகார்டியா மற்றும் ஜேஎப்கே விமான நிலையங்களில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மன்ஹாட்டன், தி பிராங்க்ஸ் மற்றும் குயின்ஸ் உள்ளிட்ட பல பெருநகரங்களில் முக்கிய வீதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், நியூயோர்க் நகரில் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி நேற்று இரவு 7 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடா புயல் வடக்கு நோக்கி நகர்வதால் நியூ இங்கிலாந்திலும் இன்று கனமழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
——————
Reported by : Sisil.L