ஆசியா எதிர்கொள்ளும் மூன்று முக்கிய சவால்களை Nikkei மாநாட்டில் எடுத்துரைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, டோக்கியோவில் இடம்பெற்ற Nikkei மாநாட்டில் ஆசியா எதிர்கொள்ளும் மூன்று சவால்களை எடுத்துரைத்தார். 

ஆசியாவின் எதிர்காலம் (Future of Asia ) எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனநாயக விழுமியங்களும் மனித உரிமைகளும், காலநிலை மாற்றம், வர்த்தக ஒருங்கிணைப்பு ஆகியவை ஆசிய நாடுகள் எதிர்கொள்ளும் மூன்று முக்கிய சவால்கள் என குறிப்பிட்டார். 

ஆசிய நாடுகளில் உள்ள பல்வேறுபட்ட அரசியல் அமைப்புகள், மனித உரிமைகளின் வரையறைகளுக்கு மதிப்பளிப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

ஆசிய-பசுபிக் பிராந்தியத்தை சேர்ந்த அரசியல், பொருளாதார மற்றும் கல்வித் தலைவர்கள் பிராந்திய பிரச்சினைகளையும் உலகில் ஆசியாவின் பங்கு குறித்தும் வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் தங்கள் கருத்துகளை முன்வைக்கும் ஒரு சர்வதேசக் கூட்டமே Future of Asia மாநாடு ஆகும்.

1995 முதல் ஒவ்வொரு ஆண்டும் நிக்கேயால் (Nikkei ) நடத்தப்படும் இது ஆசியாவின் மிக முக்கியமான உலகளாவிய மாநாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 

இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வர்த்தக ஒருங்கிணைப்பு மற்றும் கடன் நிலைத்தன்மை குறித்து கவனம் செலுத்தியதுடன், ஆசிய நாடுகள் எதிர்கொள்ளும் அபாயங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.

பெரும் வல்லரசுகளுக்கு இடையில், ஏதேனும் ஒன்றை தெரிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஆசிய நாடுகள் இருப்பதை விரும்பவில்லை என்று குறிப்பிட்ட அவர், ஆசிய நாடுகளுக்கு இடையிலான பிளவுகளுக்கும் எதிர்ப்பை வௌிப்படுத்தினார். 

ஜப்பானின் ஒத்துழைப்பு அணுகுமுறையை ஜனாதிபதி ஆதரித்ததுடன், ஜப்பான், சீனா, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கிடையில் திறந்த உரையாடல்களுக்கு அழைப்பு விடுத்தார்.  அமைதியான மற்றும் வளமான ஆசிய பிராந்தியத்தின் உருவாக்கத்திற்கு அது முக்கியமானது என்றும் கூறினார்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பான் பிரதமர் Fumio Kishida-வுடன் ஜப்பானில் வியாழக்கிழமை (25) இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன்போது, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஜப்பான் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி விக்ரமசிங்க தனது நன்றிகளைத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
 
முன்னதாக ஜப்பானின் முன்னாள் பிரதமர்  Yoshihide Suga-வையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்திருந்தார்.

Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *