சுகாதார சேவைகளில் ஈடுபடும் சுமார் 50 ஆயிரம் நிபுணர்களின் பங்குபற்றுதலுடன் இன்று (09) அடையாள வேலை நிறுத்தம் ஒன்று நடத்தப்படவுள்ளது.
இன்று (09) காலை 7.00 மணி முதல் நாளை (10) காலை 7.00 மணி வரை அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என வைத்திய நிபுணர்கள் சம்மேளனத்தின் தலைவரும் சுகாதார நிபுணர்கள் சம்மேளனத்தின் அழைப்பாளருமான ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
நீண்டகாலமாக ஆறு கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாமை மற்றும் மருத்துவம் அல்லாத சுகாதார நிபுணர்களின் கோரிக்கைகளை சுகாதார செயலாளர் அலட்சியம் செய்தமைக்கு எதிராகவே இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானிகள், மருந்தாளர்கள், கதிரியக்க வல்லுநர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், மருந்தாளர்கள், குடும்ப நல அலுவலர்கள் மற்றும் அனைத்து துணை மருத்துவப் பணியாளர்கள் உட்பட அனைத்து துணை மருத்துவ நிபுணர்களும் கலந்து கொள்ளும் இந்த வேலை நிறுத்தத்தில் 15 தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன.
மகப்பேறு வைத்தியசாலைகள், புற்றுநோய் வைத்தியசாலைகள், குழந்தைகள் வைத்தியசாலைகள் மற்றும் கொவிட் வைத்தியசாலைகளில் வேலை நிறுத்தம் இடம்பெறாது அவசர மற்றும் உயிர் காக்கும் சேவைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
——–
Reported by : Sisil.L