அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறைக் கலாசாரம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதையடுத்து, துப்பாக்கி விநியோகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. ஜனாதிபதி ஜோ பைடனும் துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்த கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என பாராளுமன்றத் தைக் கேட்டுக் கொண்டார். இந்நிலையில், துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் சட்டமூலம் அமெரிக்க பாராளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
செனட் சபையில் துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டமூலம் மீது நடந்த வாக்கெடுப்பில் 65 வாக்குகளுடன் சட்டமூலம் வெற்றிகரமாக நிறைவேறியது. தொடர்ந்து இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கும் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் பின்னர் அது ஜனாதிபதி ஜோ பைடனின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் அந்த சட்டமூலத்தில் கையெழுத்திட்டதும் அது சட்டமாக அமுலுக்கு வரும். 21 வயதுக்குட்பட்டோர் துப்பாக்கி வாங்குவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பது, மனநல ஆலோசனைக்காகவும், பாடசாலைகளின் பாதுகாப்பை அதிகரிக்கவும் 15 பில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு செய்வது போன்றவைக்கு இந்த சட்டமூலம் வழிவகை செய்கிறது.
————–
Reported by:Anthonippillai.R