சீனாவின் கடும் எதிர்ப்பு மற்றும் எச்சரிக்கைகளுக்கு மத்தியில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தாய்வான் விஜயத்துக்கு எதிராக சீனா இன்று கடுமையாக பதிலளித்துள்ளது. அதாவது தாய்வானை அண்மித்த கடற்பரப்பில் 06 இடங்களில் இருந்து நாட்டைச் சுற்றி வளைத்து பாரிய இராணுவப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது.
சீனா நடத்திய மிகப்பெரிய இராணுவப் பயிற்சிகளில் இதுவும் ஒன்று என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாய்வானுக்கு 12 மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் இது செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், தாய்வானுடனான பல வர்த்தகப் பரிவர்த்தனைகளை நிறுத்த சீனா ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது.
தாய்வானைச் சுற்றியுள்ள கடல் எல்லை மற்றும் வான்வெளியில் சீனா இராணுவப் பயிற்சியை மேற்கொண்டாலும், அமெரிக்காவின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அந்நாட்டு சபாநாயகரை ஏற்றிக்கொண்டு அமெரிக்க இராணுவ விமானம் தென்கொரியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. எனினும் சீனாவின் இராணுவப் பயிற்சி தொடர்கிறது.
சர்வதேச வர்ணனையாளர்கள் சீனாவின் இந்த நடவடிக்கை கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்தை முற்றுகையிடுவதாக உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த இராணுவப் பயிற்சிக்கு தாய்வானும் அமெரிக்காவும் தங்கள் பதிலைத் தெரிவித்துள்ளன. பிராந்தியத்தில் நிலைமையை மாற்ற சீனா முயற்சிப்பதாக தாய்வான் கூறுகிறது. சீனா பொறுப்பற்றது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
—————-
Reported by:Maria.S