இலங்கையில் அத்தியாவசிய பொருட் கள், பாண், சிற்றுண்டிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள், சீமெந்து என்பவற்றின் விலைகள் நேற்று முதல் உயர்வடைந்தன.
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை செப்டெம்பர் மாத இறுதியிலும் பால்மா, கோதுமை மா, சீமெந்து, எரிவாயு என்பவற்றுக்கு விதித்திருந்த கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் கடந்த 7ஆம் திகதியும் நீக்கியது. இதைத் தொடர்ந்து நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்ந்து வருகின்றன. இந்த நிலையில், கோதுமை மாவின் விலை ஒரு கிலோ 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய விலையின் படி கோதுமை மாவின் விலை 97 ரூபாவாகும். நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரீமா, செரண்டிப் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பால்மாவின் விலையும் கிலோவுக்கு 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு கிலோ பால்மா பைக்கற்றின் விலை 1,195 ரூபாவாகவும், 400 கிராம் பைக்கற்றின் விலை 480 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மூலப் பொருட்களின் விலையுயர்வைக் காரணம் காட்டி பாண், சிற்றுண்டி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, பாணின் விலை 5 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று சமைத்த உணவுப் பொருட்களின் விலையை 10 ரூபாவால் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதன்படி, மதிய சாப்பாட்டு பொதி, கொத்துரொட்டி, மற்றும் சிற்றுண்டிகள் 10 ரூபாவால் அதிகரித்துள்ளன. அத்துடன், தேநீர் 25 ரூபாவாகவும், பால் தேநீர் 60 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தவிர, சிமெந்தின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 50 கிலோ சீமெந்து பைக்கற் ஒன்றின் விலை 93 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று முன்தினம் லிட்ரோ எரிவாயுவின் விலையிலும் அதிகரிப்பு செய்யப்பட்டது. இந்த நிலையில் அந்த நிறுவனம் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 12.5 கிலோ எரிவாயுவின் 2750 ரூபாவாக உயர்த்தப்பட்ட நிலையில், 75 ரூபா குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 2,675 ரூபாவாக நிர்ணயிக்கப்பட் டுள்ளது. இதேபோன்று 5 கிலோ எரி வாயு 30 ரூபா குறைந்து 1,071 ரூபாவாகவும், 2.5 கிலோ எரிவாயு 14 ரூபாவால் குறைவடைந்து 506 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேசமயம், நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் நாட்டு மக்கள் கடும் அதிருப்தியையும் எதிர்ப்புகளையும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
————
Reported by : Sisil.L