ஒக்டோபர் மாதத்தில் 46,000 புலம்பெயர்வோர் கனடாவை வந்தடைந்துள்ள நிலையிலும் மேலும் அதிக புலம்பெயர்வோரை வரவேற்க கனடா தயாராகி வருகிறது .
அதற்காக, தான் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை அறிந்திருந்தும், கனடாவுக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதை கனடாவின் புலம்பெயர்தல் அமைப்பில் ஒரு நேர்மறையான வித்தியாசத்தை ஏற்படுத்தும் வாய்ப்பாக தான் பார்ப்பதாக, கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சரான Sean Fraser தெரிவித்துள்ளார்.
கனேடிய புலம்பெயர் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின் முதன்முறையாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த Fraser, இந்த மகிழ்ச்சிகரமான தகவலை வெளியிட்டார்.
நாட்டில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படும்பட்சத்தில், கனடாவின் புலம்பெயர்தல் மட்டத்தை (Canada’s immigration levels) அதிகரிக்கத் தான் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் முதலான பிரச்சினைகள் காரணமாக குறைவான அளவிலேயே புலம்பெயர்வோர் கனடா வந்துள்ளதால், கனடாவில் தற்போது குறிப்பிடத்தக்க அளவில் தொழிலாளர்கள் பற்றாக்குறை காணப்படுகிறது.
தன் வரலாற்றிலேயே மிகப்பெரிய இலக்காக, 401,000 புலம்பெயர்வோரை 2021ஆம் ஆண்டுக்குள் வரவேற்கும் திட்டத்தை கனடா செயல்படுத்தி வருகிறது. அத்துடன், 2022இல் மேலும் 411,000 புலம்பெயர்வோரையும், 2023இல் கூடுதலாக 421,000 புலம்பெயர்வோரையும் கனடாவுக்கு வரவேற்க அந்நாடு திட்டமிட்டு வருகிறது.
2022 – 2024 புலம்பெயர்தல் மட்ட திட்டம் 2022 ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
————-
Reported by : Sisil.L