வடக்கு , கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டது

வடக்கு , கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டது 

வடக்கு , கிழக்கு மாகாண தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெறவிருந்த இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் திங்கட்கிழமை (15)  வரை பிற்போடப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள  வாக்கெடுப்பொன்றின் காரணமாக பேச்சுவார்த்தை திங்கட்கிழமை வரை பிற்போடப்பட்டுள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டதாக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

எதிர்வரும் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு  இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என தமக்கு அறிவிக்கப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் M.A. சுமந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பாராளுமன்ற  உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை  ஜனாதிபதி செயலகத்தில் நேற்று ஆரம்பமானது.

நேற்றைய பேச்சுவார்த்தையில்  காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை, அரசியல் கைதிகளின் விடுதலை, அதிகாரப் பரவலாக்கம், அடிப்படைப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

நேற்று கலந்துரையாடப்பட்ட காணிப் பிரச்சினை தவிர்ந்த ஏனைய விடயங்கள் தொடர்பில் திருப்தியடைய முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார்.

காணி அபகரிப்பு பிணக்குகள் தொடர்பில் ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு நேற்றைய பேச்சுவார்த்தையின் போது சில அறிவுறுத்தல்களை வழங்கியதாகவும் அது நடைமுறைப்படுத்தப்பட்டால் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருக்கும் எனவும் அவர் கூறினார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் என தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்த போதிலும் அதற்கு ஜனாதிபதி இணங்கவில்லையெனவும் சுமந்திரன் கூறினார்.

Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *