வடக்கு, கிழக்கில் தொற்றாளர்களால் நிரம்பி வழியும் வைத்தியசாலைகள்: சபையில் சிறிதரன் எம்.பி.

வடக்கு, கிழக்கில் அனைத்து வைத்தியசாலைகளும் கொரோனாத் தொற்றாளர்களால் நிரம்பி வழிகின்றன என்று தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கொரோனா வைரஸ் தொற்று தற்காலிக  ஏற்பாடுகள் சட்டமூல இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:- மக்கள் துன்பத்தின் பிடியில் வாழ்கின்றனர். தெருக்களில் விழுந்து சாகும் மக்களை இந்த நாடு சந்திக்கின்றது. இவ்வாறு ஒரு கொடிய நோயில் மக்கள் தெருக்களில் விழுந்து சாவார்களா? குடும்பம் குடும்பமாக கொரோனாத் தாக்கத்துக்குள்ளாகி அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்களா என்று எதிர்பார்க்காதளவுக்கு இன்று இந்த நாட்டிலே மிகக் கூடியளவுக்கு கொரோனா தாக்கிக்கொண்டிருக்கின்றது.


நான் வாழ்கின்ற கிளிநொச்சி மாவட்டத்திலே இருக்கின்ற வைத்தியசாலைகள், கொரோனா தனிமைப்படுத்தல்  நிலையங்கள், உருவாக்கப்பட்ட வைத்தியசாலைகள்  எங்கேயும் தொற்றாளர்களைப் பராமரிக்க இடமில்லை.
வடக்கு, கிழக்கில் அனைத்து வைத்தியசாலைகளும் கொரோனாத் தொற்றாளர்களால் நிரம்பி வழிகின்றன. வைத்தியசாலைகளில் உள்ள நோயாளர்களைப் பார்க்கக்கூடியளவுக்கு தாதியர்களுக்கு, வைத்தியர்களுக்கு நேரமில்லை. ஏனைய நோயாளிகளைப் பார்வையிட முடியாதுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களும்  நிரம்பி வழிகின்றன.

இவ்வாறு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மாவட்டங்கள் தோறும் மக்கள் பெரும் அசௌகரியங்களைச் சந்திக்கின்றனர்” என்றார்.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *