வடக்கு காஸாவில் அல் ஷிபா மற்றும் அல் குத்ஸ் எனும் 2 மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் அந்த மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன.
மருத்துவமனைகளில் எரிபொருளுக்கும் மருந்திற்கும் தட்டுப்பாடு நிலவுவதால், முன்னரே அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் பலர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அல் ஷிபா மருத்துவமனையில் சுமார் 1500 நோயாளிகளும் 1500 மருத்துவ பணியாளர்களும் உள்ளனர். தொடரும் தாக்குதல்களால் பலர் மருத்துவமனைகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
காஸா மருத்துவமனைகளை ஹமாஸ் மறைவிடங்களாக பயன்படுத்துவதால், அவற்றின் அருகே தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் கூறி வருகிறது.
எனினும், மருத்துவமனைகளை தாம் அவ்வாறு பயன்படுத்தவில்லை என ஹமாஸ் மறுத்து வருகிறது.
உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை நிராகரித்துவிட்ட இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் குழுவினர் பணயக் கைதிகளாக பிடித்துச்சென்ற 240 பேரும் விடுவிக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என கூறியுள்ளார்.
அல் ஷிபா மருத்துவமனையை சுற்றி குண்டுகள் வீசப்படுவதாகவும் வான்வழித் தாக்குதல் நடத்தப்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையிலிருக்கும் கடைசி மின்சார ஜெனரேட்டரும் எரிபொருள் இல்லாமல் நின்றுவிட்டதால், மூன்று குறைப்பிரசவக் குழந்தைகளும் 4 நோயாளிகளும் இறந்துவிட்டதாக காஸாவின் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும், 36 குழந்தைகள் இறந்துவிடக்கூடிய ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் சுகாதார அமைச்சு தகவல் வௌியிட்டுள்ளது
Reported by:N.Sameera