யாழ்ப்பாண மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்குரிய ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.நேற்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்பொழுது கொவிட் தொற்று நிலைமையானது சற்று குறைவடைந்துள்ள நிலையே காணப்படுகின்றது. இருந்த போதிலும் நேற்று முன்தினம் கிடைத்த பிசிஆர் பரிசோதனை அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் 63 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் நேற்று வரை 17 ஆயிரத்து 664 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று(29) வரை 452 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்வடைந்து காணப்படுகின்றது.
இன்று வரை கொரோனா தொற்றுக்குள்ளாகி 17,500 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் தற்பொழுது இயல்பு நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளது மேலும் படிப்படியாக நிலைமைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றது.
தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் ஏனைய வழிபாட்டுத் தலங்களுக்குமான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே மக்கள் சற்று அவதானமாக தொடர்ந்தும் சுகாதார நடைமுறையைப் பின்பற்றி செயற்படுவது அவசியமாகும்.
ஆரம்பப் பிரிவு பாடசாலைகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. ஆரம்ப பிரிவு பாடசாலைகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பித்தபோது மாணவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்து காணப்பட்டது. எனினும் தற்போது அதிகரித்து காணப்படுகின்றது. எதிர்வரும் காலத்தில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு ஏதுவாக விடயங்கள் சம்பந்தப்பட்ட தரப்பினரால் முன்னெடுக்கப்படுன்றன.
மேலும் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடும் எதிர்வரும் 31ஆம் திகதி நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் எரி பொருட்கள் போன்றவை பொதுமக்களுக்கு தடையின்றி கிடைப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல மக்களுடைய நடமாட்டம் மற்றும் ஏனைய செயற்பாடுகளும் சுகாதார வழிமுறைகளைப் போன்ற அங்கீகரிக்கப்பட்ட அளவுக்கு உட்பட்டுச் செயற்பட வேண்டும்.
பொதுமக்கள் சுகாதார நடைமுறையைப் பேணி கட்டுப்பாடுகளுடன் தமது அன்றாட செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
———–
Reported by : Sisil.L