முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொடை மிரிஹானையில் உள்ள அவரது மனைவி வீட்டில் இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வததேவின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தேவிற்கு சொந்தமான மிரிஹான எம்புல்தெனிய சாலாவ வீதியில் அமைந்துள்ள மூன்று மாடி வீடொன்றில் இலக்கத் தகடுகள் இல்லாத சொகுசு கார் ஒன்று இருப்பதாக பொலிஸ் தலைமையகத்திற்கு தகவல் கிடைத்தது.

இதன்படி, மிரிஹான பொலிஸார் நுகேகொட நீதவான் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து, குறித்த வீட்டிற்குச் சென்று வாகனத்தை சோதனையிட்டனர்.

இலக்கத் தகடு இல்லாத சம்பந்தப்பட்ட கார் கடந்த 26ம் திகதி கண்டறியப்பட்டது.

குறித்த வீட்டில், முன்னாள் அமைச்சரின் மனைவியின் தாயார் வசிப்பதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ரத்வத்தேவின் பிரத்தியேக செயலாளர், கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் அந்த காரை தமது வீட்டின் வாகன தரிப்பிடத்திற்கு கொண்டு வந்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அவரது மனைவியும் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். 

பதிவு செய்யப்பட்ட இலக்கத் தகடுகள் மற்றும் சாவி இல்லாத அந்த சொகுசு காரை மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுச் செல்ல பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Reported by:K.S.Karan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *