மீன்பிடித் துறைமுகங்களுக்கு நாளாந்தம் 05 இலட்சம் லிட்டர் மண்ணெண்ணெயை வழங்குவதற்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளது.
மீனவர்களின் எரிபொருள் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்தது.
இதன்படி, மீன்பிடித் துறைமுகம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் இந்து கருணாரத்ன குறிப்பிட்டார்.
கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடும் சுமார் 27,000 படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவர்களில் அநேகமானோர் அன்றாடம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருவதோடு, கடந்த காலங்களில் ஏற்பட்ட மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டால் இவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மீன்பிடித் துறைமுகங்களில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கண்டறியும் விசேட வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கிணங்க, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் கிரிந்த மீனவர் துறைமுகம், தங்காலை, பூராணவெல்ல மற்றும் சுதுவெல்ல உள்ளிட்ட துறைமுகங்களுக்கு இன்று கண்காணிப்பு விஜயம் மேற்கொள்வதாக இந்து கருணாரத்ன தெரிவித்தார்.
Reported by :Maria.S