மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், நீர் கட்டணத்தையும் அதிகரிக்க நேரிடும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தலவாக்கலையில் இன்று நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனை கூறினார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜீவன் தொண்டமான், மின் கட்டணம் அதிகரித்துள்ளமையால், நீர் கட்டணத்தையும் அதிகரித்து தான் ஆக வேண்டும் என கூறினார்.
30 வருடங்களுக்கு முன்பிருந்த நிலையில் மக்கள் தற்போது இல்லை என குறிப்பிட்ட ஜீவன் தொண்டமான், அவர்கள் அரசியல் ரீதியில் வளர்ந்திருப்பதாகவும் கூறினார்.
தற்போதைய நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்பது தனது அபிப்பிராயம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Reported by:Maria.S