உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்க ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்து வருகிறது.
அமெரிக்காவின் நடவடிக்கையால் சில நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதையும், அதற்கான உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடுகளால் ஆத்திரமடைந்த ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக், ஐரோப்பிய கூட்டமைப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஐரோப்பிய கூட்டமைப்பு ரஷ்யாவிடம் இருந்து பெற்றோலியப் பொருட்கள் வாங்குவதை நிறுத்தினால், ரஷ்யாவும் அதற்கு பதிலடி கொடுக்கும்.
ஐரோப்பிய நாடுகளுக்கு மசகு எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்துவோம்.
குறிப்பாக ஜெர்மனிக்கு செல்லும் எரிவாயுக் குழாய்களை துண்டித்து விடுவோம். எரிவாயு குழாய்கள் துண்டிக்கப்பட்டால் அங்கு பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விடும்.
ரஷியாவிடம் இருந்து தான் ஐரோப்பிய கூட்டமைப்பின் பெரும்பான்மை நாடுகள் பெட்ரோலியப் பொருட்களை வாங்குகிறார்கள். எங்கள் மீது தடை விதித்தால், பாதிக்கப்படுவது நீங்களும் தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இதனை புரிந்து கொண்டு இதுபோன்ற தடைகளை விதிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ரஷியாவின் எச்சரிக்கையை தொடர்ந்து அமெரிக்காவின் யோசனையை ஜெர்மனி நிராகரித்துள்ளது. அமெரிக்கா கூறுவதுபோல் ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோல் வாங்குவதை நிறுத்தினால், பெட்ரோலிய பொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விடும். எனவே இதுபோன்ற நடவடிக்கையை எடுக்க ஜெர்மனி விரும்பவில்லை என்று கூறியுள்ளது.
நெதர்லாந்து நாடும் இதே முடிவை எடுத்துள்ளது. ஜெர்மனி,நெதர்லாந்து நாடுகளின் முடிவால் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Reported by : Sisil.L