ஆப்கானில் தலிபான்கள் மகளிர் நல அமைச்சைக் கலைத்து அதற்கு வேறு பெயர் மாற்றியுள்ளார்கள்.ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய தலிபான்கள் புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளனர். 33 பேர் கொண்ட அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பெண் கூட இடம்பெறவில்லை.தலிபான்கள் ஆட்சியைப் பிடித்ததால் ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமை கேள்விக்குறியாகி உள்ளது என்று பல்வேறு நாடுகள் கருத்து தெரிவித்து வருகின்றன.
ஏற்கனவே ஆட்சியில் தலிபான்கள் இருந்தபோது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். பெண்கள் வேலைக்குச் செல்வதை தடை செய்திருந்தனர். தற்போது அதுபோன்று கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என்று தலிபான்கள் தெரிவித்திருந்தனர்.
ஆனால் அவர்கள் பெண்கள் மீதான பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் பெண்கள் விவகார அமைச்சரவை அலுவலகத்தில் பெண் ஊழியர்கள் வரக்கூடாது என்று திருப்பி அனுப்பி விட்டனர். இதே போல பல இடங்களில் வேலைக்குச் செல்லும் பெண்களை திருப்பி அனுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் மகளிர் நல அமைச்சை தலிபான்கள் கலைத்துள்ளனர். அந்த அமைச்சுக்கு பிரார்த்தனை, வழிகாட்டுதல், நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் அமைச்சு என்று பெயரை மாற்றி உள்ளனர்.
இந்த அமைச்சு ஏற்கனவே 1996 முதல் 2001 வரை தலிபான்கள் ஆட்சியில் இருந்தபோது செயற்பாட்டில் இருந்தது. இந்த அமைச்சு சார்பில் பெண்கள் கண்காணிக்கப்படுவார்கள். உறவினர்களுடன் செல்லாமல் தனியாகச் செல்லும் பெண்களுக்கு தண்டனை கொடுத்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Reported by : Sisil.L