எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பயணத் தடையின்றி நிலைமையை தந்திரோபாய ரீதியாக நிர்வகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
மேலும், நேற்று 747 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள அதேவேளை 27 பேர் உயிரிழந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், மக்கள் அதிகமாக அணிதிரள்வது மிகவும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையாக அமையும் என சுகாதாரத் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதன் விளைவாக, அவர்கள் கூட்டாக ஒன்றுகூடுவதை முடிந்தவரை குறைக்குமாறு மக்களை வலியுறுத்துகின்றனர்.
எனினும், கிறிஸ்மஸ் அல்லது புத்தாண்டுக் காலங்களில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் நேற்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தடைகளை விதிக்காமல் பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குதல் உள்ளிட்ட தடுப்பூசி திட்டத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
தொற்று நோயியல் பிரிவின் படி, கொரோனா வைரஸுக்கு 13,575 பேர் வீடுகளிலும், மருத்துவ மனைகளிலும் மற்றும் இடைநிலை சிகிச்சை நிலையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
——————
Reported by : Sisil.L