நைஜீரியத் தலைநகர் அபுஜாவில் உள்ள சிறைச்சாலை மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பொலிசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலையின் சுவர் இடிந்து விழுந்தது. இதையடுத்து 600-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடினர்.
இந்தத் தாக்குதலில் சிறைக் காவலர் ஒருவர் பலியானார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த போகோ ஹராம் அமைப்பைச் சேர்ந்தவர்களை விடுவிக்க தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தப்பி ஓடிய கைதிகளில் 300 பேரை பொலிஸார் பிடித்தனர். மற்றவர்களைத் தேடி வருகிறார்கள். இதுகுறித்து உள்துறை அமைச்சின் செயலாளர் ஷூஜப் பெல்கோர் கூறும்போது, “அபுஜாவின் குஜேவில் உள்ள சிறைச்சாலை மீது சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அவர்கள் போகோஹராம் அமைப்பைச் சேர்ந்தவர்கள். ஜெயிலில் உள்ள சக கூட்டாளிகளை மீட்க தாக்குதலை நடத்தி உள்ளனர்” என்றார்.
Reported by: Maria.S