நைஜீரியாவில் பாடசாலையில் புகுந்து 140 மாணவர்கள் கடத்தல்

மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹாரம் உட்பட பல்வேறு பயங்கரவாதக் குழுக்கள் கடும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததோடு பள்ளிக்கூடங்கள் மீது தாக்குதல் நடத்தி மாணவ, மாணவிகளை கடத்திச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.


அதிலும் குறிப்பாக, அண்மைக் காலமாக பள்ளி மாணவ, மாணவிகள் கடத்தப்படும் சம்பவம் அடிக்கடி நிகழ்கின்றது. கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில், நாட்டின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள கதுனா மாகாணத்தின் தலைநகர் கதுனா சிட்டியில் உள்ள அரசு மேல்நிலை பாடசாலை ஒன்றில் நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன.


அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கிகளுடன் வகுப்பறைக்குள் நுழைந்தனர்.‌ இதனால் பதற்றமடைந்த மாணவ-மாணவிகள் பலர் மற்றும் ஆசிரியர்கள் பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பி அருகிலுள்ள புதர்களுக்குள் சென்று ஒளிந்து கொண்டனர். ஆனாலும் பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் 140 மாணவர்களை கடத்திச் சென்றனர். இந்த நடவடிக்கைக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *