நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த மக்கள் மழையுடன் கூடிய காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில தாழ்நிலப் பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.எனினும், மழைவீழ்ச்சி படிப்படியாக குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று தெரிவித்தது.
கண்டி, தவுலகல, யாலேகொட பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். 39 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், அவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
இதனிடையே, குருநாகல் எபலவ பிரதேசத்தில் சதுப்பு நிலத்தில் ஒருவர் வீழ்ந்து காணாமற்போயுள்ளார். உஹுமீய ஈதனவத்த பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே காணாமற்போயுள்ளார்.கடும் மழை காரணமாக குக்குலே கங்க நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், அதன் காரணமாக புலத்சிங்கள பிரதேசத்தில் தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. புலத்சிங்கள வீதியில் பரகொட, எட்டபகஸ்கந்திய, நாலியத்த உள்ளிட்ட பிரதேசங்கள் நீரில் மூழ்கின.மா ஓயா பெருக்கெடுத்தமையினால், கிரியுல்ல பிரதேசத்தில் சில வீடுகள் நீரில் மூழ்கின.
அவிசாவளை தல்துவ பிரதேசத்தில் சீத்தாவக்க கங்கை பெருக்கெடுத்தமையினால், சில வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
இரத்தினபுரி கரவிட்ட பிரதேசமும் வெள்ளத்தில் மூழ்கியது.
கொழும்பு – பூகொட வீதி, கொழும்பு – மல்வானை வீதி மற்றும் மல்வானை பிரதேசமும் வௌ்ளத்தில் மூழ்கின. களனி கங்கை பெருக்கெடுத்தமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
கடும் மழை காரணமாக மத்திய மலைநாட்டிலும் சில பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
தெதுரு ஓயாவின் எட்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
பொல்கொல்ல மகாவலி அணையின் ஐந்து வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால், கங்கையை அண்மித்த பகுதி மக்கள் கவனமாக இருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Reported by :Maria.S