நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தர தேசியக் கொள்கை அவசியம்! ஜனாதிபதி

நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தரமான தேசியக் கொள்கை ஒன்றே அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதற்காக கட்சி பேதமின்றி ஒரே தேசிய கொள்கையின் ஊடாக செயற்பட்டு நாட்டைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட அனைவரும் முன்வர வேண்டும் என்றும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
 
அபிவிருத்தியடைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நல்ல பொருளாதாரக் கொள்கையும் அரசியல் ஸ்திரத்தன்மையும் இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, “தேசிய சபையை” ஒரு தளமாகக் கொண்டு தேசிய கொள்கைக் கட்டமைப்புக் குறித்து கலந்துரையாட ஒன்றாக இணைவோம் எனவும் தெரிவித்தார்.
 
இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட முதலாவது கிருமித் தொற்று நீக்கிய, திரவ மருந்து உற்பத்தி தொழிற்சாலையை நேற்று முன்தினம் (10) கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தில் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
 
போட்டி மற்றும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஏற்றுமதி பொருளாதாரமொன்றை உருவாக்கும் தேசிய கொள்கையொன்றை உருவாக்க தாம் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்,முதலில் இந்த நிறுவனத்தின் தலைவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எதிர்காலத்தை உன்னிப்பாகக் கவனித்தவர். எங்களுக்கு உள்ள மருந்து தட்டுப்பாடு குறித்து அவருக்கு நல்ல புரிதல் இருந்தது. எனவே இலங்கைக்குத் தேவையான மருந்துப் பொருட்களை வழங்குவதோடு மட்டுமன்றி சர்வதேச ரீதியில் தேவையான மருந்துகளை உற்பத்தி செய்து எமது ஏற்றுமதித் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு இந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
 
ஒரு இளைஞனாக ஆரம்பித்த இந்த வேலைத்திட்டத்தை அவர் வெற்றிகரமாக தொடர்ந்தும் முன்னெடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன். இந்த இடத்தில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இலங்கையின் பொருளாதாரத்தில் மிகவும் கடினமான காலப்பகுதியில் இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளது. நமது வரவு செலவுத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையும் இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு ஒரு காரணம். நமக்குக் கிடைக்கும் அந்நியச் செலாவணி நமது தேவைக்கே போதுமானதாக இல்லை. அதனால் ஒவ்வொரு வருடமும் கடன் வாங்க வேண்டியுள்ளது. இப்போது கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளோம். நமது பொருளாதாரம் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
 
நமக்குத் தேவையான அன்னியச் செலாவணியை நாம் ஈட்ட வேண்டும். அந்நிய செலாவணி பற்றாக்குறையுடனோ வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறையுடனோ இருக்க முடியாது. வரவுசெலவுத் திட்டத்தில் மேலதிக நிதியை வைத்திருப்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். அவ்வாறாயின் நமது வெளிநாட்டு வருமானத்தை அதிகரிக்க வேண்டும்.
Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *